Friday, October 29, 2010

அன்னமிட்ட கை


ஆயிரத்தில் ஒருவன், அன்னமிட்ட கை. இன்னும் என்ன சொல்லி வேண்டுமானாலும் இவரை அழைக்கலாம். ரோட்டில் கலைந்த முடியும், அழுக்கேறிய உடலும் மன நலம் குன்றியவராகவும் ஒருவரை கண்டால் சராசரி மனிதனாய் நகர்ந்து போகும் இந்த உலகில், அவர்களை ஒவ்வொரு நாளும் தேடி சென்று உணவளிப்பது மட்டுமல்லாமல், அதை உணவு என்று கூட தெரியாமல் தட்டிவிடவும் தள்ளிவைப்பவர்களுக்கும் தன் கையாலேயே ஊட்டியும் விடும் இவர்  ஆயிரத்தில் ஒருவன் அல்ல லட்சத்தில் ஒருவன் என்று கூட சொல்லலாம், பின்னல் வரும் காரணங்களுக்காக.

நாராயணன் கிருஷ்ணன்(29) - இந்த பெயர் இன்று உலகம் பூராவும் உச்சரிக்கப் படுகிறது. காரணம் உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இதோ...

நாராயணன் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரர் (Chief Chef). அதுமட்டுமில்லாமல் தன் தொழிலில் பல பதக்கங்களை குவித்தவர். Swiss நாட்டில் தனக்கு கிடைத்த வேலையில் சேருவதற்கு முன் தன் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையம் வந்தவர் அங்கு பிளாட்பாரம் ஓரத்தில் புத்தி பேதலித்த பெரியவர் ஒருவர் தன் மலத்தையே தான் எடுத்து தின்னும் அவலத்தை நேரில் கண்ட போது அதிர்ச்சியானார்(இதை எழுதும்போதே எனக்கு உமட்டல் வருகிறது என்பதை உண்மையுடன் ஒத்துக்கொள்கிறேன்).

என்ன நினைத்தாரோ, ரயில் பிடித்து ஊருக்கு சென்றவர் திரும்பவும் Swiss நாட்டுக்கு செல்லவேயில்லை. இனி தன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் இம்மாதிரி மனிதர்களுக்கு உணவளிப்பது ஒன்றே என்ற முடிவுக்கு வந்தார். அன்றிலிருந்து (2003 முதல்) இன்றுவரை பன்னிரண்டு லட்சத்திற்கும் அதிகமான உணவு பொட்டலங்களை தானே (தனது அக்சயா தொண்டு நிறுவனத்தின் மூலம்) சமைத்து பொட்டலம் கட்டி அதை ஒரு வேனில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக தெரு தெருவாக மனநலம் குன்றியவர்கள் வயதானவர்கள் என எல்லோருக்கும் கொடுத்து உதவுகிறார்.

தற்போது இவரின் இந்த சேவையை பாராட்டி அமெரிக்க போன்ற நாடுகளில் பெருமளவு பார்க்கப்படும் CNN
தொலைக்காட்சி, தனி மனித சேவையில் உலகின் தலை சிறந்த மனிதரை (உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றத்தை கொண்டுவரும் - “everyday individuals who are changing the world”)  தேர்வு செய்ய அமைத்த கமிட்டி பரிந்துரைத்த 10, 000 நபர்களில் இருந்து முதல் பத்து பேரில் ஒருவராக நாராயணனை உலகில் 100 க்கு மேலான நாடுகளில் உள்ள CNN பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்து உள்ளார்கள்.

இதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நவம்பர் 25 தேதி ஒரு விழா எடுத்து கவரவிக்கப்போகிறது CNN. அத்துடன் $ 25,000 பணமுடிப்பும் அளிக்கிறது. அதே நேரத்தில் தலை சிறந்த பத்து பேரில் ஒருவரை online voting மூலம் தேர்ந்தெடுத்து அவரை "CNN - Hero of the year" ஆக அறிவிக்கிறது. அப்படி அறிவிக்கப்படுபவர்க்கு 100, 000 அமெரிக்க டாலர்கள் பணமுடிப்பாக அளிக்கிறது.

நாராயணனின் தற்போதைய ஒரே கவலை, தங்களுக்கு கிடைக்கும் உதவிகள் மூலம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 22 நாட்களுக்கு மட்டும் தான் இம்மாதிரி ஆதரவற்றவர்களுக்கு உணவு அழிக்க முடிகிறது.

என்னுடைய ஒரே வேண்டுகோள் உங்களுக்கெல்லாம் என்னவென்றால், நம்மால் இந்தளவு ஒரு தியாக சிந்தனையுடன் வாழ்கையை அர்பணிக்க முடியாவிட்டாலும், பெரிய அளவில் பண உதவிகள் செய்ய முடியாவிட்டாலும் கூட கீழே உள்ள சுட்டி மூலம் நமது நாராயணனை தேர்வு செய்தால் அவர் CNN அறிவிக்கப்போகும் "Hero of the Year" ஆக தேர்வாகிவிட்டால் அவரின் தொண்டு உலக நாடுகளுக்கெல்லாம் தெரிவது மட்டுமில்லாமல் அவரின் இந்த பனி இன்னும் சிறப்பாக தொடர நாம் நமது பங்கை அளித்த மன நிறைவாவது கிடைக்கும்.

எனக்கு கீழே ஓட்டளிக்க நான் கேட்கவில்லை. ஆனால் இங்கு கிளிக் செய்து நாராயணனுக்கு ஓட்டளிக்க மறந்து விடாதீர்கள். நன்றி.

மேலும் விபரங்கள் ஆங்கிலத்தில் அறிய : இங்கே சொடுக்கவும்.

படம் நன்றி: The Hindu      
share on:facebook

Saturday, October 23, 2010

சும்மா அதிருதல!



சும்மா அதிருதல!

வலைப்பூவில் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள். 
வாரத்திற்கு குறைந்தது 250 முதல் 300 பதிவுகள்.
மாதத்திற்கு 10, 00, 000 ஹிட்டுகள்.
சென்ற வருடத்தில் ஒரே நாளில் மட்டும் 10, 00, 000 ஹிட்டுகள்.

என்ன சார் வாய பொளக்குறீங்க. அட போங்க சார். மாசத்திற்கு ஒரு பதிவு போடறதுக்கே இங்க தடுங்கினத்தம் போடறேன். இதல்லாம் Andrew Sullivan அவர்களின் சாதனைகள்.

பதிவுலகம், இணையத்தளம் என எல்லோரும் உபயோகப்படுத்த துவங்காத காலக்கட்டம் அது.  The Daily Dish என்று அவர் பிளாக் எழுத ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றன. நேற்று அவருடைய பிளாக்கில் என்ன எழுதினார் என்று அவருக்கே ஞாபகம் இருப்பதில்லை. 

தனது 27 வது வயதில்  The New Republic என்ற நாளிதழில் ஒரு இளைய பத்திரிகையாளராக சேர்ந்த ஆண்டரு தான் எழுதும் விசயங்களை எல்லோரும் படிக்கும் வகையில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் தன்னுடைய techie நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் தன்னுடைய ஆசையை வெளியிட அவரும் இவருக்காக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் பதிந்து கொண்டிருந்தார். சில காலம் கழித்து என்ன நினைத்தாரோ தன் பத்திரிக்கை நண்பரிடம் எனக்கு இதை விட முக்கியமான வேலைகள் இருக்கிறது. பிளாக்கர் பிளாகிங் என புதிதாக ஒன்று வந்துள்ளது. அதில் எப்படி பதிய வேண்டும் என சொல்லித் தருகிறேன். நீங்களே போட்டுக் கொள்ளுங்கள் என கூறிவிட்டார். அப்படி எழுத ஆரம்பித்ததுதான் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் ஒரு வலைதளமாக The Daily Dish மாறி உள்ளது.

தான் எழுதும் கட்டுரை மற்றும் எதுவாக இருந்தாலும் அதை படிக்கும் வாசகர்கள் அதற்கு  உடனே கமென்ட்/விமர்சனம் போட்டு அதை தானும் படிக்கும் வாய்ப்பை இந்த வலைதளம்  வழங்கியதை பார்த்து வியந்து போன Sullivan அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இனி எதிர்காலத்தில் பத்திரிக்கைகளை விட இது தான் பிரபலமாக போகின்றன என அறிந்து கொண்டார். அன்று முதல் இன்று வரை அவரின் வலைதளத்தில் எழுதியதை நிறுத்தவில்லை. வருடத்திற்கு இரு வார விடுமுறை எடுத்துக் கொள்வதை தவிர. 

நாமெல்லாம் நாளுக்கு ஹூஹூம் வாரத்திற்கு ஒரு பதிவு போடவே தினறிக்கொண்டு இருக்கும் போது,  
வார நாட்களிலும், வார இறுதிகளிலும் குறைந்தது இருபது நிமிடத்துக்கு ஒரு முறை தன் பிளாக்கில் எழுதும் இவர், உண்மையில் அவரின் வலைத்தளத்தில் உருவாகும் traffic மற்றும் update களை சமாளிக்க முடியாமல் தினமும் திணறுகிறார்.

ஒரு பதிவை போட்டுவிட்டு ஒரு மணி நேரத்துக்கொருமுறை ஓபன் செய்து ஏதும் கமென்ட் வந்திருக்கான்னு நாம பார்துக்கிட்டுருக்கோம். இவரோ
தற்போது நான்கு பேர் கொண்ட சிறு குழுவை அமர்த்தி தன்னுடைய பிளாக்கை பராமரித்துக்கொண்டலும் இவருக்கு பின் 
என்னாகும் என்று இவரின் follower ஒருவரிடம் கேட்டால் "If Andrew dies, it dies" என எழுதி இருக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலில் ஆர்வம் காட்டி எழுதி வரும் Sullivan தான் ஒரு அரசியல் அநாதை என்கிறார்.

அப்பாடி, Sullivan புண்ணியத்தில் இன்று நான் ஒரு பதிவு போட்டாகிவிட்டது.
share on:facebook

Sunday, October 17, 2010

கதை அல்ல நிஜம்...

இன்று காலை எழுந்ததும் அநேகமாக எல்லோரும் அவர்களின் குல தெய்வங்களை நிச்சயம் கும்பிட்டிருப்பார்கள். இந்தியாவின் தென் மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் சூலூர்பேட்டா என்கிற ஒரு சிறிய நகரத்திற்கு அருகில் இந்தியாவின் ஏவுகணை ஏவும் தளமான ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக நிலவிற்கு மனிதரில்லாத ஒரு உயரினத்தை ஏவுகணையில் வைத்து  அனுப்ப எல்லாம் தயார் நிலையில் உள்ளது. சரியாக காலை 10:10 விண்ணில் சீறிப்பாய எல்லா ஏற்பாடுகளும் தயார். மற்ற எல்லோரைவிடவும் எனக்கு டென்ஷன் அதிகம் இருப்பதில் ஆச்சிர்யம் ஒன்றுமில்லை. ஏனெனில் நான் தான் அந்த பிராஜக்டின் தலைமை பொறியாளர்.


நேரம் 10:00 மணி. ஏவு தளத்தில் எல்லாவற்றையும் ஒரு முறை சுற்றி வந்து, தலைமை விஞ்சாநியிடம் என்ன சார் எல்லாம் ரெடி தானே 10:09 கவுன்ட் டவுன் ஸ்டார்ட் பண்ணிடலாம்ல என கேட்டேன். கண்டிப்பாக சார். எந்த பிரச்னையும் இல்ல. எல்லாம் சரியாய் போய்கிட்டு இருக்கு என்றார். வெரி குட் என்றபடியே எல்லா விஞ்சாநிகளும் அமர்திருந்த வட்ட வரிசையில் நாடு நாயமாக சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்து எதிரே மிக பெரிய திரையில் வட்டமும் புள்ளியுமாய் தெரியும் பிரபஞ்சத்தின் வரைபடங்களை மேய்ந்து கொண்டிருந்தேன்.

அடுத்த ஓரிரு மணித்துளிகளில் தலைமை கண்காணிப்பாளரின் அறிவிப்பை தொடர்ந்து ஏவுகணை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. 10.. 9.. 8.. 7.. 6.. 5.. 4.. 3.. 2.. 1.. 0 FIRE என்ற அடுத்த நிமிடம் எல்லோரும் சற்று அண்ணாந்து பார்க்க ஆரம்பித்தார்கள். ஏவுகணையின் அடியில் வெளியான நெருப்பிற்கும் அதனுடைய சூட்டிற்கும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் ஏவுகணை மேலே எழும்பவேயில்லை. ஒரு கணத்தில் அனைவரின் முகமும் சுண்டி ஒருவரை ஒருவர் ஒரு வித இலாமை பார்வையுடன் பார்த்துக்கொண்டனர். ஏன், எப்படி, என்ன ஆச்சு...எங்கும் கேள்விகள். சரியான பதில் தான் இல்லை.
 
கவலை தோய்ந்த முகத்துடன் எதிரில் தெரிந்த திரையையும், ஒருவருக்கொருவர் குழுமி குழுமி பேசிக்கொள்வதையும் பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்றுகொண்டிருந்த பொழுதுதான் சற்று கார 
சாரமான சத்தமும் யாரோ யாரையோ அதட்டும் சத்தமும் கேட்டு அங்கு என்ன நடக்கிறது என அறியும் பொருட்டு எனது இருக்கையை விட்டு எழுந்து அங்கு சென்றேன். 
 
என்ன சார்? என்ன இங்கு சத்தம். என்ன நடக்கிறது இங்கே?
 
சார் நாம்ப எல்லோரும் உங்களையும் சேர்த்து ஏவுகணை கிளம்பாததற்கு என்ன காரணம்னு முழிச்சிக்கிட்டு இருக்கோம். ஒன்னுமே புரியலை. இவரு நம்ம டிபார்ட்மெண்ட சுத்தம் பண்றவரு. இவரு ஏவுகணை கிளம்ப ஐடியா சொல்றாராம். கேளுங்க சார் ஜோக்க என்று ஒரு பொறியாளர் கூறியவுடன் அங்கிருந்த நிலைமையையும் மறந்து எல்லோரும் சிரித்து விட்டார்கள். 
 
சார் எல்லோரும் சற்று அமைதியா இருக்கிங்களா? யாரையும் கொறச்சி எடை போட கூடாது. 
 
ஹல்லோ என்னோட என் ஆபிஸ்க்கு வாங்க என்றபடியே அவரை அழைத்துக்கொண்டு என் அறையில் நுழைந்து கதவை மூடிக் கொண்டேன்.     
 
இப்ப சொல்லுங்க மிஸ்டர் ...
 
சார் என் பேரு பெருமாள்,...
 
ஓகே பெருமாள். இப்ப நீங்க இங்க என்ன பண்றீங்க ஏதுன்லாம் கேக்க எனக்கு டயம் கிடையாது. சொல்லுங்க எப்படி அந்த ஏவுகணையை பறக்க வைக்கலாம்?
 
சார் அது வந்து....
-------------------------
-------------
------
 
என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு? அப்படி செஞ்சா ராக்கெட் பரந்துடுமா?
 
கண்டிப்பா சார். ஒரு வாட்டி ட்ரை தான் பண்ணுங்களேன்.
 
இறுதியாக மிஸ்டர் பெருமாள் கூறியபடி ஒரு காரியத்தை செய்தவுடன் ராகெட் எல்லோரும் அண்ணாந்து பார்பதற்குள் வின்னிர்க்கே  சென்று மறைந்து விட்டது.
 
அப்படி என்ன தான் மிஸ்டர் பெருமாள் ஐடியா சொல்லி இருப்பார். முடிந்தால்/தெரிந்தால் பின்நூட்டத்தில் போடுங்களேன்.

                                               **************************

சொல்லுங்க மிஸ்டர் பெருமாள். எங்களால நம்பவே முடியல. நீங்க சொன்னபடியே ராகெட்ட கீழ கொஞ்சம் சாய்த்து  மேல தூக்கினவுடன் உடனே  மேலே கிளம்பிடுச்சே!

நாங்க எல்லோரும் என்ன செய்யறதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருந்தப்ப உங்களுக்கு மட்டும் எப்படி இந்த ஐடியா வந்துச்சு?

சார். எங்க கிராமத்துல எங்க ஸ்கூல் வாத்தியார் கிட்ட மட்டும் தான் ஸ்கூட்டர் ஒண்ணு இருந்துச்சு. அத அவர் எப்ப ஸ்டார்ட் செஞ்சாலும் ஸ்டார்ட் ஆகாது. உடனே அத கீழ ஒருபுறமா சாய்த்து  பிறகு நிமிர்த்தி ஒரு உதை விட்டார்னா உடனே வண்டி கிளம்பிடும். அதே டெக்னிக்க  தான் நான் இங்கயும் உங்ககிட்ட சொன்னேன். அது வொர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான்.

                                                   **************************



ஐயோ... அடிக்க வரீங்களா. உடு ஜூட். 

அப்புறம் இது நிஜம் அல்ல கதைதான். மிகச் சரியா கணிச்ச Anonymous க்கு வாழ்த்துக்கள். 

//Anonymous said... ஒரு 45 டிகிரி சாய்த்து கொஞ்ச நேரம் கழித்து அப்பாலிக்கா கெளப்பு சாமி.....ஜோரா கெளம்பும்...//
share on:facebook

Thursday, October 14, 2010

எல்லோர் கையிலும் A. K. 47. . .

கணவன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு வீட்டில் நள்ளிரவில் உள்ளே புகுந்த திருடன் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து கணவனை மிரட்டுகிறான். மரியாதையாக பீரோவை திறந்து அதிலுள்ள நகை பணம் எல்லாவற்றையும் எடுத்து கொடு. இல்லைனா உன் மனைவியின் சங்கை அறுத்து விடுவேன் என பயமுறுத்துகிறான். கணவனுக்கு வேறு வழி தெரியவில்லை. சரி நான் எல்லாத்தையும் எடுத்து கொடுத்துடுறேன். பீரோவோட சாவி மாடியில இருக்கு. நான் போய் அத எடுத்துட்டு வந்துடுறேன். அதுவரைக்கும் என் மனைவிய ஒண்ணும் பண்ணிடாதனு கெஞ்சிக் கொண்டே மாடிப்படிகளை நோக்கி ஓடினார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்தவரை பார்த்த திருடனுக்கு தேள் கொட்டியதை விட அதிகமாக உடல் உதறியது. ஐயோ சாமி. என்ன விட்டுடுங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். நா ஓடிடுறேன் என கத்திக்கொண்டே திரும்பி பார்க்காமல் ஓடினான்.

கைல கத்தி வச்சுக்கிட்டு மிரட்டியவன் ஓடியதற்கு காரணம், திரும்பி வந்தவரின் கையில் இருந்த A.K. 47 தான் காரணம். அதெப்படி சாதாரணமான ஒருத்தவரிடம் A.K. 47 இருக்கும்னு நீங்க கேக்கறது காதுல விழுது. நான் சொன்ன சம்பவம் ரசியாவில நடந்தது. அங்க நடந்திருந்தா கூட அந்த வீட்டுகாரர் வச்சிருந்தது நிஜ A.K. 47 அல்ல. அது ஒரு inflatable fake A.K. 47. கையில் வைத்து மூடிக்கொள்ளும் அளவிற்கு உள்ள ஒரு சிறிய பலூன் போன்ற பொருளில் காற்றை நிரப்பினால் நிஜ A.K. 47 போலவே அது inflate ஆகி தோற்றமளிக்கும்.

மேலே நீங்கள் படித்தது inflatable weaponary பற்றி நானே உருவாக்கிய கதை. இனி வருவது அனைத்தும் உண்மை. சந்தேகமிருந்தால் கீழே உள்ள u-tube லின்க்கை கிளிக் செய்யுங்கள்.

ரசியாவில் உள்ள ஒரு கம்பெனி artificial/fake inflatable weaponary அதாவது நிஜ ஆயுதங்கள் போலவே தோற்றமளிக்கும் டம்மி ஆயுதங்களை அதுவும் ஒரு பையில் வைத்து அடக்கி கொள்ளும் அளவிற்கு ஆன பிளாஸ்டிக் பேக்கை காற்றடித்தால் ஒரு மிக பெரிய பீரங்கி வண்டியாக மாறும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இது என்ன பெரிய விஷயமான்னு நீங்க நினைக்கலாம். அனால் நீங்கள் நான் மட்டுமல்ல எதிரி நாட்டு உளவு விமானங்கள் மற்றும் ரேடார்கள் ஸ்கேன் பண்ணும்போது கூட இது ஒரிஜினல் பீரங்கி டாங்கர்கள் போல தோற்றமளிக்கும் வகையில் அதனுடைய நிறம் மற்றும் குணத்தை அமைத்திருக்கிறார்கள். எதிரி நாட்டு ரேடார்கள் லேசர் ஸ்கேன் செய்து உளவு பார்க்கும் போது கூட ஒரிஜினல் பீஸ் போலவே ரிப்போர்ட் வரவழைக்கும் வகையில் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

இதனால் என்ன பலன் என்று நீங்கள் கேக்கலாம். ஒரு பீரங்கி வாங்கும் காசிற்கு ஓராயிரம் inflatable fake பேரங்கிகளை வாங்கி பாகிஸ்தான் பார்டரில் நிறுத்தினால் எட்டி பார்க்க கூட அவர்கள் பயப்பிடுவார்கள மாட்டார்களா? சரி இது மாதிரி தொழில் நுட்பம் சீக்கிரத்தில் எல்லா நாட்டிற்கும் வந்துவிடுமே என்றால் யாராலும் எது நிஜம் எது பொம்மை பீரங்கி என கண்டு பிடிக்க முடியாத போது அது பொய்னு தைரியமா சண்டைக்கு போய் அது உண்மையான பீரங்கியா போயடுச்சுனா அப்புறம் நஷ்டம் யாருக்கு?

பொய்யான பீரங்கிகள் மட்டுமல்ல, பொய்யான கண்காணிப்பு டவர்கள், ரேடார்கள் பீரங்கி மற்றும் பீரங்கி வண்டிகள் என எல்லாத்தையும் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையில் அது எப்படி இருக்கும் என பார்க்கவேண்டுமா? இங்கே சொடுக்குங்கள்.

நன்றி YouTube.
share on:facebook

Wednesday, October 6, 2010

"ஆ" மெரிக்கா

      
அமெரிக்கா, அமெரிக்கானு நாம் அமெரிக்காவை பற்றியும் அமெரிக்கர்களை பற்றியும் வாயை பிளந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்து நம்மை விட அதிகமாக வாயை பிளப்பதும் உண்டு.

வேற எதுக்கு?

1. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி பேசப்படுவது பற்றி கேள்வி படும்போது.

    இங்கு அமெரிக்காவில் ஆங்கிலம் ஒரு மொழி தான் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பேசப்படும் மொழி. 

2. இந்தியாவில்  பெரும்பாலான திருமணங்கள் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்படுகிறது என அறியும்போது.

   அமெரிக்காவில் இது மிகவும் அரிது. பிள்ளைகள் தாங்களே தங்களது துணையை தேடிக்கொண்ட பிறகு கல்யாண நாள் நேரம் குறித்துவிட்டு அதை சர்வ சாதாரணமாக தங்கள் பெற்றோரிடம் தெரிவிப்பது தான் இங்குள்ள பழக்கம்.

3. இந்திய குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து ஒரே அறையில் தூங்குவார்கள் என்று சொன்னால்.

   இங்கு பிறந்து சில நாட்களிலேயே குழந்தைகளை தனியாக படுக்க வைத்துவிடுவார்கள். சற்று பெரிய குழந்தை ஆனவுடனேயே தனி படுக்கை அறை ஒதுக்கி அதில் தனியாக தூங்க பழக்கிவிடுவார்கள்.

4. இந்தியாவிலிருந்து வரும் LKG மற்றும் முதல் வகுப்பு படித்த குழந்தைகள் கூட அழகாக ஆங்கில எழுத்துக்களை கோர்த்து எழுதுவது cursive writing பார்க்கும் போது.

    இங்கு மெத்த படித்தவர்களின் கையெழுத்து கூட நம்மூரில் மூணாம் கிளாஸ் படிக்கும் குழந்தையின் கையெழுத்தை விட மோசமாக இருக்கும்.  

5. நம்மூரில் வீட்டு பாடம் செய்யாவிட்டாலோ பெயில் ஆகிவிட்டாலோ பள்ளியில் அடி பின்னுவார்களே. இதை சொன்னாலே என்னமோ அவர்களை அடித்தது போல் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் இங்கு.

   இங்குள்ள பள்ளிகளில் அடி உதை (corporate punishment) என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

6. இந்திய பெண்கள் கட்டும் சேலையும் அதன் நீளம் மற்றும் அதை பெண்கள் கட்டும் விதத்தையும் கண்டு வாயை பிளப்பார்கள்.

7. நாம் கும்பிடும் நூற்றுக் கணக்கான தெய்வங்களையும், ஒவ்வொரு சாமியின் பெயரையும் உருவத்தையும் நாம் ஞாபகம் வைத்து கொள்வதை பார்த்து "ஆ" என வாயை பிளப்பார்கள்.

8. நம்மூரில் போலீஸ் லஞ்சம் வாங்குவது மிகவும் சகஜம் என தெரியும் போது...

   இங்கு லஞ்சம் என்பது பெரும்பாலும் கிடையாது. அப்படியே இருந்தாலும் போலீசிடம் "ஊஹூம்" தப்பி தவறி நீங்கள் கொடுக்க முயன்றால் கூட உங்களுக்கு சங்கு தான். 

9. நாம் சாப்பிடும் கார உணவு வகைகளை பார்த்தால்.

   தப்பி தவறி ஒரு மிளகை இந்திய உணவில் சாப்பிட்டு விட்டால் கூட  இவர்கள் பத்து கோக் குடித்து விடுவார்கள்.     

10. வேற என்ன...இன்னும் நம்மூர் சங்கதி எத பத்தி சொன்னாலும் வாயை தான் பிளக்க போகிறார்கள். 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. அவ் அப்போது மோகன் குமார் போன்றோர்கள் தரும் ஊக்கம் ஒரு முக்கிய காரணம்.  நன்றி மோகன் குமார்.
share on:facebook