Monday, January 9, 2012

"ஜெயிப்பது சுகம்" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வெற்றி அடைய முடியாதா?


இந்த பதிவை அடுத்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை தொடராக நினைத்து எல்லாம் நான் எழுதவில்லை. நம்பிக்கை தொடர்கள்/புத்தகங்கள் படித்து மட்டும் ஒருவர் முன்னேறி விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சந்திக்கும்  சவால்களும் வெற்றி பாதைகளும் வெவ்வேறாக இருப்பது தான். அதே நேரம் நம்பிக்கை பற்றியும், நம்மை தேடி வரும் சந்தர்ப்பங்களை எப்படி நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் என்னுடைய அனுபவங்கள் மற்றும் என் நண்பர்கள், சுற்றத்தாரின் அனுபவங்களை இந்த தொடரின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

பத்தாவது வகுப்பு பொது தேர்வு அட்டவணை அறிவித்துள்ள இந்த நேரத்தில், பத்தாவது வெற்றிகரமாக முடித்து பிளஸ் 1 செல்லும் நேரத்தில் மாணவர்களிடையே எழும் மிக பெரிய குழப்பமும் தடுமாற்றமும் எந்த குரூப் தேர்வு செய்ய வேண்டும் என்பதே. இப்போது மாணவர்கள் எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எந்த குரூப் எடுத்தால் என்ன ஆகலாம் வேலைவாய்ப்பு எப்படி என்று நம்மை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் இந்த குரூப் தேர்வு செய்வதில் பெற்றோர்கள் பங்கும் நிறையவே உள்ளது.

நான் பத்தாவது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இருந்தாலும் எனக்கு காமர்ஸ் குரூப் தான் படிக்க வேண்டும் என்று விருப்பம். காமர்ஸ் க்ரூப் எடுத்து அக்கவுன்ட்டன்சி படித்து பின்னாளில் CA ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இதை நான் என் பெற்றோர்களிடம் தெரிவித்த போது, என்னுடைய நியாயமான ஆசைக்கு அவர்கள் குறுக்கே நிற்கவில்லை.

சின்ன வயதில் இருந்தே என் தந்தை எனக்கு நிறைய சுதந்திரமும், எனக்கு நானே செய்துகொள்ள முடியும் காரியங்களை என்னிடமே விட்டு விடுவார். அப்போது தஞ்சை மாவட்டத்திலேயே ஒரே ஒரு பள்ளியில் மட்டும் தான் காமர்ஸ் க்ரூப் இங்கிலீஷ் மீடியம் இருந்தது. நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்ததால் அப்பள்ளியை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை. அது ஒரு அரசு பள்ளி போன்றது. பத்தாவது வரை தமிழ் மீடியமும் பிறகு பிளஸ் ஒன், பிளஸ் டூ மட்டும் ஆங்கில மீடியத்தில் சொல்லிக் கொடுப்பார்கள். அப்பள்ளிக்கு முதன் முதல் சென்ற போது, அரசு பள்ளிக்கு உரிய எல்லா தோற்றங்களையும் பார்த்து எனக்கு சற்று பயம் தான். இங்கு படித்தால் நான் படித்து தேறி விடுவேனா என்று? அந்த பயம்  பள்ளி சேர்ந்த சில நாட்களிலேயே மறைந்து விட்டது என்பது வேறு கதை.

ஒரு வழியாக என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று பள்ளியில் இருந்து  முதல்வருடன் நேர் காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற என்னிடம்  அப்போதிருந்த பள்ளி முதல்வர், இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கும் நீ, ஏன் பர்ஸ்ட் க்ரூப் எடுக்காமல் காமர்ஸ் க்ரூப் எடுக்கிறாய் என கேட்டு, நான் சொன்ன பதிலில் சமாதானம் அடையாமல் என் பெற்றோரை அழைத்து வந்தால் தான் காமர்ஸ் க்ரூப் குடுப்பேன் என கூறிவிட்டார். அது மட்டும் இல்லை. இப்பள்ளி அரசு பள்ளி போன்றதால், மிக குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்போம். உங்களை போன்றவர்கள் எங்கு வேண்டும் ஆனாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு எங்கும் பணம் கொடுத்து சேர முடியாது. அதலால், உன் அப்ளிகேஷன் வெய்ட்டிங் லிஸ்டில் தான் இருக்கும். எல்லோருக்கும் இடம் கொடுத்த பிறகு தான் உன்னை கன்சிடர் பண்ணுவோம் என்றும் கூறிவிட்டார்.

சார், நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க (வடிவேலு பாணியில் படிக்கவும்) என மனதில் நினைத்துக் கொண்டு அதே நேரம் இந்தப் பள்ளியை விட்டால் நமக்கு காமர்ஸ் க்ரூப் படிக்க வேறு பள்ளி இல்லை. ஆதலால் எப்படியாவது இப்பள்ளியில் சேர்ந்து விட வேண்டும் என காத்திருந்து ஒரு வழியாக சேர்ந்து விட்டேன். இவ்வாறு நான் காமர்ஸ் க்ரூப்பில் சேர்வதற்கு  பல தடங்கல்கள் வந்த போதும் நான் எடுத்த  முடிவின் படி, என் ஆசை படி வைராக்கியத்துடனும் அதே பள்ளியில் கடைசியில் எப்படியோ சேர்ந்து விட்டேன்.

அன்று எனக்கு தெரியாது, நான் படிக்கப் போகும் காமர்ஸ் க்ரூப்பினால் நான் விரும்பிய ஆடிட்டர் ஆக போவதில்லை என்று.

தொடரும்...
   

share on:facebook

5 comments:

CS. Mohan Kumar said...

நல்ல விஷயம் தொடரை தொடரவும்

நீங்க காமர்ஸ் குருப் என இவ்ளோ நாளா தெரியாது

ambuli 3D said...

அருமை நண்பரே
http://ambuli3d.blogspot.com

Sankar Gurusamy said...

ஜெயிப்பதற்கு தகுதி அடிப்படைக் கல்வியும், நம்பிக்கையும் மட்டுமே. மருத்துவமும் பொறியியலும் படித்தவர்கள் எத்தனைபேர் அந்த துறையின் படிப்பு சார்ந்த இடங்க‌ளில் வேலை செய்கிறார்கள் என கணக்கெடுத்தால் தெரிந்துவிடும் அவற்றின் லட்சணம்.

நல்ல முயற்சி.. தொடருங்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ஆதி மனிதன் said...

@மோகன் குமார்
//நல்ல விஷயம் தொடரை தொடரவும்

நீங்க காமர்ஸ் குருப் என இவ்ளோ நாளா தெரியாது//

நன்றி மோகன். நான் படித்த இன்னும் பல க்ரூப்புகள் தெரிய வரும். அது வரை பொறுமை!

ஆதி மனிதன் said...

நன்றி அம்புலி 3D.

நன்றி Sankar Gurusamy. உங்கள் கருத்து தான் என்னுடையதும் ஆகும்.

Post a Comment