Wednesday, August 15, 2012

அப்பா என்னும் மந்திர சொல்.

இன்று சுதந்திர தினம். இந்த நாள் மற்ற பண்டிகைகளை விட சற்று வித்தியாசமானது. தீபாவளிக்கு இந்துக்கள் புது ஆடை அணிவார்கள். அதே கிறிஸ்துமஸ், ரம்சானுக்கு பண்டிகை வந்தால் அந்தந்த மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். அநேகமாக இந்தியாவில் உள்ள அனைவரும் கொண்டாடும் தினம் இந்த சுதந்திர தினமாகத் தான் இருக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை.

அம்மா ஒரு தலைமை ஆசிரியர், அண்ணன் ஒரு பேராசிரியர், நான் என் மனைவி கூட ஒரு காலத்தில் விரிவுரையாளர்களாக பனி புரிந்ததினாலோ என்னவோ சுதந்திர தினம் எங்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே இருந்து வந்தது. அது மட்டும் அல்லாமல், இன்றைய தினம் என் அக்காளின் பிறந்த நாளும் கூட. சுதந்திர தினத்தில் அவர் பிறந்ததால் அவருக்கு 'சுதந்திரா தேவி' என்று பெயர். ஒவ்வொரு முறையும் எல்லோரும் அவரை அழைத்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவது வழக்கம். ஆனால், இன்று எங்கள் குடும்பத்திற்கு மட்டும் ஒரு சோக நாள்.

ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு இதே தினம் எங்கள் தந்தை எங்களை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார்கள். பிள்ளைகள் எல்லோருடனும் அவர் ஒரு நண்பராக தான் பழகினார். அம்மா மிகவும் கண்டிப்பு. அதனாலோ என்னவோ, எங்கள் தந்தை எங்களிடம் கண்டிப்பு காண்பிக்கவே மாட்டார். கல்லூரி நாட்களில் pocket money அம்மா இரண்டு ரூபாய் தான் தருவார்கள். நான் ஐந்து ரூபாய் கேட்டால் உனக்கு எதற்கு அவ்வளவு பணம் என அம்மா கேட்பார். அப்பாவோ, அவன் காலேஜ் போகிறான். பிரண்ட்ஸ் கூட ஸ்நாக்ஸ் சாபிடுவான் அவனுக்கு பணம் குடு என கேட்டு வாங்கி கொடுப்பார்.

அது மட்டும் அல்ல, அரசியல், சினிமா, உலகம் என அனைத்தையும் எங்கள் தந்தையுடன் நாங்கள் அலசுவோம். பல நேரங்களில் சாப்பிடும் போது அரசியல் வாதங்கள் சண்டையாக மாறி விடும். அம்மா தான் சமாதானம்  செய்வார்.

அப்பாவுக்கு அடுத்தவர்களுக்கு உதவுவது மிகவும் பிடிக்கும். வீட்டின் வெளியே யார் வந்து யாசகம் கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது  என்பது அவர் உத்தரவு. 

அதே போல், ஜாதி மத பேதம் அவர் என்றுமே பார்த்ததில்லை. அதனால் இன்று வரை எனக்கும் ஜாதி மதத்தின் மேல் அப்படி பெரிதாக ஒரு ஈர்ப்பு இல்லை. கிராமத்திலிருந்து தஞ்சை டவுனில் உள்ள எங்கள் வீட்டிற்கு மாட்டு வண்டியில் நெல் ஏற்றி அனுப்பினால், அதில் வர விவசாய கூலி தொழிலாளிகள் போட்டி போட்டுக் கொண்டு நிற்பார்கள் ஒரே காரணம், "மாப்பிள்ளை" ஐயா(இப்படி தான் எல்லோரும் அப்பாவை கூப்பிடுவார்கள்). வீட்டுக்கு போனா நடு வீட்டுல உக்கார வச்சு வயிறார சாப்பாடு போடுவார்கள். செலவுக்கும், சினிமா பார்ப்பதற்கும் பணம் கொடுப்பார்கள் என்பதால் தான் போட்டி இருக்கும்.

தான் ஒரு மிராசுதார், முதலாளி என்று அவர் என்றுமே நினைத்ததில்லை. வேலை ஆட்களுடன் ஒன்றாக அவர்கள் வண்டியில் பின்னாடி உட்கார்ந்து கொண்டு செல்வார்.

அவரின் ஒரே ஆசை நான் இந்தியா வந்து எல்லோருடனும் இருக்க வேண்டும் என்பது அதே போல் நான் இங்கு வந்து அவரும் என் மேல் உள்ள பிரியத்தினால் ஒரு வாரம் என்னுடன் சென்னையில் தங்கி அடுத்த நாள் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரத்தில் தான் Massive Heart Attack வந்து கண நேரத்தில் கண் மூடிவிட்டார். எப்போதும் அவர் கூறி வந்ததெல்லாம், யாருக்கும் கஷ்டம் வைக்காமல் என் அப்பாவை போல் (எங்கள் தாத்தா) பொட்டுன்னு போய்டணும் என்று. அதே போல் எங்கள் யாருக்கும் கஷ்டம் வைக்காமல், அவரும் அதிகம் கஷ்டபடாமல் இந்த மண்ணுலகை விட்டு போய்விட்டார்.

எனக்கும் கடவும் நம்பிக்கை அதிகம் கிடையாது. ஆனால், என் தந்தையை நான் இன்று எங்களை வழிநடத்தும் தெய்வமாக தான் பார்கிறேன். எங்கள் வாழ்வு, வசதி அனைத்தையும் உங்கள் பொற் பாதங்களுக்கு சமர்பிக்கிறோம் அப்பா. "அப்பா" இந்த வார்த்தையை உச்சரிக்கும் போது தான் என்ன ஒரு நம்பிக்கை, தைரியம் கிடைக்கிறது.

எங்களை வழி நடத்துங்கள் தந்தையே. உங்கள் விருப்பம்போல் பிறருக்கு என்றும் உதவும் நல்ல மனசு எங்களை விட்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.   

share on:facebook

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்...

மனம் நெகிழ்ந்த பதிவு... நன்றி...

CS. Mohan Kumar said...

நண்பா உங்கள் தந்தை உங்கள் அனைவரின் நினைவுகளில் தான் வாழ்கிறார். அதனால் அவரை குறித்து மகிழ்ச்சியாக நினையுங்கள்

Post a Comment